கேள்வி: முஸ்லிம் ஆட்சியாளர்கள் அனைவரும் காஃபிர்களா?
பதில்: தற்போதைய சூழலில் முஸ்லிம் தலைவர்கள் அல்குர்ஆன், ஸுன்னா அடிப்படையில் இயங்குவதில்லை என்றாலும், தகுந்த ஆதாரங்கள் இன்றி எந்த ஒரு முஸ்லிமையும் காஃபிர்கள் எனக் கூற முடியாது. ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
أَيُّمَا امْرِئٍ قَالَ لأَخِيهِ يَا كَافِرُ. فَقَدْ بَاءَ بِهَا أَحَدُهُمَا إِنْ كَانَ كَمَا قَالَ وَإِلاَّ رَجَعَتْ عَلَيْهِ
எந்த மனிதர் தம் (முஸ்லிம்) சகோதரரைப் பார்த்து ‘இறைமறுப்பாளனே!’ (காஃபிரே!) என்று அழைக்கின்றாரோ நிச்சயம் அவர்கள் இருவரில் ஒருவர் அச்சொல்லுக்கு உரியவராகத் திரும்புவார். அவர் கூறியதைப் போன்று இவர் இருந்தால் சரி! இல்லாவிட்டால் அவர் சொன்ன சொல் அவரை நோக்கியே திரும்புகிறது. (அறிவிப்பு: அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி), புகாரீ 6104, முஸ்லிம் 60)
இது முஸ்லிம் தலைவர்கள், ஆட்சியாளர்கள் என அனைவருக்கும் பொருந்துகின்ற கூற்றாகும். இவர்கள் அனைவரும் ஒரே மார்க்கம், ஒரே வழிமுறையில் வாழ்ந்தாலும் ஒரு சிலர் பகிரங்கமாகத் தீமைகளைச் செய்கின்றனர். கடாஃபி ஸுன்னாவைக் குறை கூறுகிறார். அல்குர்ஆனில் இடம்பெற்றுள்ள குகைவாசிகளின் சம்பவத்திலும் குறை கண்டுள்ளார். அவ்வாறே அபூ ருகைபா, ஹாஃபிள் அஸத், ஸதாம் ஹுஸைன் போன்றோரும் வரம்புமீறிச் செயல்பட்டுள்ளனர். யெமன் ஆட்சியாளர்களோ கம்யூனிஸத்தையும் இஸ்லாமிற்கு எதிரான யுத்தத்தையும் ஆதரித்துள்ளனர்.
முஸ்லிம் தலைவர்கள் ஊடகங்களிலும், மாநாடுகளிலும் தம்மை இஸ்லாமிய ஆட்சியாளர்கள் எனக் கூறிக்கொண்டாலும் அவர்கள் இஸ்லாம் கூறும் போக்கில் செல்பவர்கள் அல்ல. இவர்கள் அனைவரும் அல்லாஹ் கூறும் கட்டளைகளின் பக்கம் திரும்பி வர வேண்டும்.
ஒன்றைக் கூற மறந்துவிட்டேன். இன்றைய காலத்தின் தஜ்ஜாலாக, வழிகேட்டின் இமாமாக இருக்கின்ற குமைனியைப் பற்றிச் சொல்ல வேண்டும். அவர் இஸ்லாமிற்கு எதிரான பல நச்சுக் கருத்துகளைப் பரப்பியுள்ளார். ஈரானில் அஹ்லுஸ் ஸுன்னாவை வழிகெடுத்துள்ளார். நபிமார்கள், மலக்குகளை விடவும் அதி சிறப்புகள் தமது இமாம்களுக்கு இருப்பதாக பகிரங்கமாகவே கூறியுள்ளார். ஏழு இமாம்களை ஆதரிக்கும் இந்த வழிகேடர் தற்போது பதவி வகிக்காவிட்டாலும் இச்சிறப்பு தனக்கும் இருப்பதாகவே கூறியுள்ளார். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். ராஃபிளா என்போர் இஸ்லாமைக் குறை கூறுபவர்களுக்கு (நச்சுக் கருத்துகளைத் திணிப்பவர்களுக்கு) முன்மாதிரிகளாக இருப்பவர்கள். இஸ்லாமிய நாடுகளுக்கு எதிராக செயல்படுபவர்கள். ஆனாலும் அவர்களைக் காஃபிராக்கும் அதிகாரத்தை நாம் கையில் எடுக்க முடியாது. யெமன் நாட்டு ஜனாதிபதி, சவூதி மன்னர், சூடான் மன்னர், எகிப்து ஜனாதிபதி ஆகியோர் அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளின் போக்கில் சென்றாலும் நாம் அவர்களுக்கு காஃபிர்கள் எனத் தீர்ப்பு கொடுக்க முடியாது. அல்லாஹ்வே உதவி தேடப்படுவதற்குத் தகுதியானவன். ஒருவரைக் காஃபிர் எனக் கூறுவது இஸ்லாமிய அழைப்புப்பணியின் முறையுமல்ல; இஸ்லாமில் சிறந்த விசயமுமல்ல. மாறாக, அவர்களுக்கு உபதேசம் செய்யப்பட வேண்டும்.
இஸ்லாமிய அறிஞர்கள் தங்களின் கடமையைச் சரிவர நிறைவேற்றுவதே அவர்களுக்குரிய கடமையாகும். அல்லாஹ் கூறுகிறான்:
لَوْلَا يَنْهَاهُمُ الرَّبَّانِيُّونَ وَالْأَحْبَارُ عَنْ قَوْلِهِمُ الْإِثْمَ وَأَكْلِهِمُ السُّحْتَ لَبِئْسَ مَا كَانُوا يَصْنَعُونَ
அவர்கள் பாவமான வார்த்தைகளைக் கூறுவதிலிருந்தும், விலக்கப்பட்ட பொருள்களை அவர்கள் உண்பதிலிருந்தும், (அவர்களுடைய) மேதைகளும் குருமார்களும் அவர்களைத் தடுத்திருக்க வேண்டாமா? இவர்கள் செய்வதெல்லாம் தீமையேதாம். (குர்ஆன் 5:63)
முஸ்லிம்களின் ஆட்சித்தலைவர்களுக்கு அறிவுரை கூறுவது, அஹ்லுல் இல்ம் எனப்படுவோராகிய இஸ்லாமியக் கல்விமான்களின் கடமையாகும். அல்லாஹ்வே புகழுக்குரியவன். அவர்களில் நிச்சயமாக அவ்வாறு அறிவுரை கூறுவோரையும் நாம் பார்க்கத்தான் செய்கிறோம். தலைவர்கள், ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை அவர்கள் தங்களைச் சூழ்ந்திருக்கின்ற தீயவர்களால்தான் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். முஸ்லிம்களின் தலைவர்களில் சிலர் அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளின் இராஜ தந்திர தொடர்புகளால் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். தன்னைச் சூழவுள்ள தீய நட்புகள், தீய இராஜாங்கத் தொடர்புகள் இன்றி ஆட்சி செய்ய முடியாது எனும் அவர்களின் சிந்தனை அவர்களை இந்த வலையில் சிக்க வைத்துள்ளது. எனவே, அவர்களிடம் தீமை நுழைந்துவிட்டது. இது தவிர, அவர்களிடம் தெளிவான குஃப்ரைக் காணாத வரை அவர்களை காஃபிர்களாக்கும் அதிகாரம் (அனுமதி) நமது கையில் கிடையாது.
உபாதா இப்னு ஸாமித் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
فِيمَا أَخَذَ عَلَيْنَا أَنْ بَايَعَنَا عَلَى السَّمْعِ وَالطَّاعَةِ فِي مَنْشَطِنَا وَمَكْرَهِنَا وَعُسْرِنَا وَيُسْرِنَا وَأَثَرَةٍ عَلَيْنَا ، وَأَنْ لاَ نُنَازِعَ الأَمْرَ أَهْلَهُ إِلاَّ أَنْ تَرَوْا كُفْرًا بَوَاحًا عِنْدَكُمْ مِنَ اللهِ فِيهِ بُرْهَانٌ
‘நாங்கள் உற்சாகமாயிருக்கும் போதும் சோர்ந்திருக்கும்போதும் வசதியாயிருக்கும்போதும் சிரமத்திலிருக்கும்போதும் எங்களைவிடப் பிறருக்கு முன்னுரிமை வழங்கப்படும்போதும் கூட (ஆட்சித் தலைவரின் கட்டளையை)ச் செவியேற்று (அவருக்குக்) கீழ்ப்படிந்து நடப்போம்; ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களுடன் நாங்கள் சண்டையிடமாட்டோம்; எந்த விஷயம் பகிரங்கமான இறைமறுப்பு என்பதற்கு அல்லாஹ்விடமிருந்து எங்களுக்கு ஆதாரம் கிடைத்துள்ளதோ அத்தகைய விசயத்தை ஆட்சியாளரிடம் நாங்கள் கண்டால் தவிர’ என்று எங்களிடம் நபி (ஸல்) அவர்கள் உறுதிமொழி வாங்கியதும் அவர்கள் எங்களிடம் பெற்ற பிரமாணங்களில் அடங்கும். (புகாரீ 7056, முஸ்லிம் 1706)
அபூ ஹுறைறா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
كَانَتْ بَنُو إِسْرَائِيلَ تَسُوسُهُمُ الأَنْبِيَاءُ كُلَّمَا هَلَكَ نَبِيٌّ خَلَفَهُ نَبِيٌّ وَإِنَّهُ لاَ نَبِيَّ بَعْدِي وَسَيَكُونُ خُلَفَاءُ فَيَكْثُرُونَ قَالُوا : فَمَا تَأْمُرُنَا قَالَ فُوا بِبَيْعَةِ الأَوَّلِ فَالأَوَّلِ أَعْطُوهُمْ حَقَّهُمْ فَإِنَّ اللَّهَ سَائِلُهُمْ عَمَّا اسْتَرْعَاهُمْ
‘இஸ்ரவேலர்களை நிர்வகிப்பவர்களாக இறைத்தூதர்கள் இருந்தனர். இறைத்தூதர் ஒருவர் இறக்கும்போதெல்லாம் மற்றோர் இறைத்தூதர் அவருக்குப் பிறகு வருவார். மேலும், எனக்குப் பின் எந்த இறைத்தூதரும் (வரப்போவது) இல்லை. ஆயினும், இனி (எனக்குப் பின்) கலீஃபாக்கள் (பிரதிநிதிகள்) நிறையப் பேர் தோன்றுவார்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ‘அவர்கள் வரும்போது நாங்கள் என்ன செய்ய வேண்டுமென்று நீங்கள் உத்திரவிடுகின்றீர்கள்?’ என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு, ‘அவர்களில் முதலாவதாக வருபவரிடம் உறுதிப்பிரமாணம் (செய்ய வேண்டிய உங்கள் கடமையை) நிறைவேற்றுங்கள். பிறகு அடுத்து வருபவரிடம் (அந்தக் கடமையை நிறைவேற்றுங்கள்.) அவர்களுக்கு அவர்களின் உரிமையைக் கொடுத்துவிடுங்கள். ஏனெனில், அல்லாஹ் அவர்கள் நிர்வகித்தவை பற்றி அவர்களிடம் கேட்கவிருக்கிறான்’ என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். (புகாரீ 3455)
முஸ்லிமின் ஓர் அறிவிப்பில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக இப்படிப் பதிவாகியுள்ளது:
مَا مِنْ نَبِيٍّ بَعَثَهُ اللَّهُ فِي أُمَّةٍ قَبْلِي، إِلَّا كَانَ لَهُ مِنْ أُمَّتِهِ حَوَارِيُّونَ وَأَصْحَابٌ. يَأْخُذُونَ بِسُنَّتِهِ وَيَقْتَدُونَ بِأَمْرِهِ. ثُمَّ إِنَّهَا تَخْلُفُ مِنْ بَعْدِهِمْ خُلُوفٌ. يَقُولُونَ مَا لَا يَفْعَلُونَ. وَيَفْعَلُونَ مَا لَا يُؤْمَرُونَ. فَمَنْ جَاهَدَهُمْ بيده فَهُوَ مُؤْمِنٌ. وَلَيْسَ وَرَاءَ ذَلِكَ مِنَ الإِيمَانِ حبة خردل
எனக்கு முந்தைய சமுதாயத்தார் மத்தியில் அல்லாஹ் அனுப்பிய ஒவ்வோர் இறைத்தூதருக்கும் அவருடைய சமுதாயத்திலேயே சிறப்பு உதவியாளர்களும் நண்பர்களும் இல்லாமல் இருந்ததில்லை. அவர்கள் அந்த இறைத்தூதரின் வழிமுறையைக் கடைப்பிடிப்பார்கள்; அவரது உத்தரவைப் பின்பற்றி நடப்பார்கள். அந்தத் தோழர்களுக்குப் பிறகு சிலர் வருவார்கள். அவர்கள் தாம் செய்யாதவற்றைச் சொல்வார்கள். தமக்குக் கட்டளையிடப்படாதவற்றைச் செய்வார்கள். ஆகவே, யார் இ(த்தகைய)வர்களுடன் தமது கரத்தால் போராடுவாரோ அவர் இறைநம்பிக்கையாளர் ஆவார். யார் இவர்களுடன் தமது நாவால் போராடுவாரோ அவரும் இறைநம்பிக்கையாளர் ஆவார். யார் இவர்களுடன் தமது உள்ளத்தால் போராடுவாரோ அவரும் இறைநம்பிக்கையாளர்தாம். இவற்றுக்கப்பால் இறைநம்பிக்கை என்பது கடுகளவுகூட கிடையாது. (அறிவிப்பு: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி), முஸ்லிம் 80)
‘அல்லாஹ்வின் தூதரே! அவர்களோடு நாங்கள் போர் செய்யவா?’ என்பதாகவும் கேட்கப்பட்டது. ‘இல்லை. அவர்கள் தொழுது கொண்டிருக்கும் காலமெல்லாம் (அவர்களோடு போர் செய்யாதீர்கள்)’ என்று நபியவர்கள் கூறினார்கள்.
அவ்ஃப் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
خِيَارُ أَئِمَّتِكُمُ الَّذِينَ تُحِبُّونَهُمْ وَيُحِبُّونَكُمْ، وَتُصَلُّونَ عَلَيْهِمْ وَيُصَلُّونَ عَلَيْكُمْ، وَشِرَارُ أَئِمَّتِكُمُ الَّذِينَ تُبْغِضُونَهُمْ وَيُبْغِضُونَكُمْ، وَتَلْعَنُونَهُمْ وَيَلْعَنُونَكُمْ»، قَالُوا: قُلْنَا: يَا رَسُولَ اللهِ، أَفَلَا نُنَابِذُهُمْ عِنْدَ ذَلِكَ؟ قَالَ: لَا، مَا أَقَامُوا فِيكُمُ الصَّلَاةَ، لَا، مَا أَقَامُوا فِيكُمُ الصَّلَاةَ، أَلَا مَنْ وَلِيَ عَلَيْهِ وَالٍ، فَرَآهُ يَأْتِي شَيْئًا مِنْ مَعْصِيَةِ اللهِ، فَلْيَكْرَهْ مَا يَأْتِي مِنْ مَعْصِيَةِ اللهِ، وَلَا يَنْزِعَنَّ يَدًا مِنْ طَاعَةٍ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்கள் தலைவர்களில் நல்லவர்கள் யாரெனில், நீங்கள் அவர்களை நேசிப்பீர்கள். அவர்களும் உங்களை நேசிப்பார்கள். நீங்கள் அவர்களுக்காகப் பிரார்த்திப்பீர்கள். அவர்களும் உங்களுக்காகப் பிரார்த்திப்பார்கள். உங்கள் தலைவர்களில் தீயவர்கள் யாரெனில், நீங்கள் அவர்களை வெறுப்பீர்கள். அவர்களும் உங்களை வெறுப்பார்கள். நீங்கள் அவர்களைச் சபிப்பீர்கள். அவர்களும் உங்களைச் சபிப்பார்கள்’ என்று கூறினார்கள். மக்கள், ‘அல்லாஹ்வின் தூதரே! அத்தகைய சூழலில் அ(ந்தத் தலை)வர்களுடன் நாங்கள் போரிடலாமா?’ என்று கேட்டார்கள். அதற்கு, ‘வேண்டாம். உங்களிடையே அவர்கள் தொழுகையை நிலைநாட்டும் வரை (வேண்டாம்). அறிந்துகொள்ளுங்கள். ஒருவர், தம்மை நிர்வாகம் செய்கின்ற ஆட்சியாளரிடம் இறைவனுக்கு மாறுசெய்யும் செயல் எதையேனும் கண்டால், அவர் செயல்படுத்தும் அந்தப் பாவச்செயலை அவர் வெறுக்கட்டும். ஆனால், கட்டுப்படுவதிலிருந்து (தமது) கையை விலக்கிக்கொள்ள வேண்டாம்’ என்று சொன்னார்கள். (முஸ்லிம் 1855)
முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில் அர்ஃபஜா (ரலி) அவர்கள் வாயிலாக பின்வரும் நபிமொழி வந்துள்ளது:
مَنْ أَتَاكُمْ وَأَمْرُكُمْ جَمِيعٌ عَلَى رَجُلٍ وَاحِدٍ يُرِيدُ أَنْ يَشُقَّ عَصَاكُمْ أَوْ يُفَرِّقَ جَمَاعَتَكُمْ فَاقْتُلُوهُ
ஒரு மனிதரின் (தலைமையின்) கீழ் உங்கள் (அரசியல்) நிலை ஒன்றுபட்டிருக்கும்போது, உங்கள் ஐக்கியத்தை உடைக்கும் அல்லது உங்கள் கட்டமைப்பைக் குலைக்கும் நோக்கத்தோடு உங்களிடம் யாரேனும் வந்தால் அவரைக் கொன்றுவிடுங்கள். (முஸ்லிம் 3773)
எனவே, நமது தலைவர்களுக்குக் கட்டுப்பட்டு நடப்பதே முஸ்லிமாக இருக்கும் நாம் செய்ய வேண்டிய மிக முக்கியக் கடமையாகும். அவர்களுக்கு நல்வழியைக் காட்ட வேண்டுமென நாம் அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டும். வட்டி வங்கிகளுடனான தொடர்பு, ஆண்பெண் கலப்பு, மதுபானச் சாலை, சினிமா போன்றவற்றுக்கு அங்கீகாரம் வழங்கல், வரிச்சுமையை விதித்தல் போன்ற அவர்களிடம் ஏற்படும் இன்னோரன்ன தீங்குகளை (மனதால்) வெறுக்க வேண்டும். இஸ்லாமிற்குப் புறம்பான அனைத்தையும் வெறுக்க வேண்டும்; நிராகரிக்க வேண்டும். ஹறாமை ஹலாலாக்குதல், அல்லாஹ்வுடைய சட்டங்களைவிட தாங்கள் போடும் சட்டங்கள்தான் உயர்வானவை என அவர்கள் முழு மனதோடு செயல்பட்டாலே தவிர அவர்களைக் காஃபிர்கள் எனக் கூறுவது முற்றிலும் தவறானதாகும். அல்லாஹ் கூறுகிறான்:
أَفَحُكْمَ الْجَاهِلِيَّةِ يَبْغُونَ وَمَنْ أَحْسَنُ مِنَ اللَّهِ حُكْمًا لِقَوْمٍ يُوقِنُونَ
அறியாமைக் காலத்துத் தீர்ப்பையா அவர்கள் விரும்புகிறார்கள்? உறுதியான நம்பிக்கையுள்ள மக்களுக்கு அல்லாஹ்வைவிடத் தீர்ப்பு வழங்குவதில் அழகானவன் யார்? (குர்ஆன் 5:50)
وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ
எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, அவர்கள் நிச்சயமாகக் காஃபிர்கள்தாம். (குர்ஆன் 05:44)
இஸ்லாமிய ஆட்சியாளர்கள் தாம் செயல்படுத்துகிற சட்டங்கள் அல்லாஹ்வின் சட்டங்களைவிடச் சிறந்தவை என்றோ அல்லாஹ்வின் சட்டங்களுக்கு ஒப்பானவை என்றோ கருதாத வரை அவர்களை இறைமறுப்பாளர்கள் எனக் கூறக் கூடாது. அதிகமான இஸ்லாமியத் தலைவர்களும், ஆட்சியாளர்களும் அல்லாஹ்வுடைய சட்டங்களை வேண்டுமென்றே புறக்கணிப்பதில்லை. இது பற்றிய அறிவு அவர்களிடம் இல்லை என்பதாலே அவற்றைச் செயல்படுத்தாமல் அல்லது உதாசீனமாக, பொடுபோக்காக இருக்கின்றனர். எனவே, அல்லாஹ்வின் பக்கம் அழைக்கின்ற அழைப்பாளர்களின் கடமை என்னவெனில், அவர்களுக்கு நல்லுபதேசம் செய்ய வேண்டும்; அல்லாஹ்வின் வேதனை குறித்து அவர்களுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டும். அவ்வாறே ஆட்சியாளர்களும் அல்லாஹ்வின் தண்டனைகளைப் பயந்துகொள்ள வேண்டும். இன்று அவர்கள் கடுமையான பதற்றத்தில் இருக்கிறார்கள். முஸ்லிம்களது ஆட்சியாளர்களின் நிலைமை மிகவும் கவலைக்குரியதாக இருக்கின்றது. இதற்கான காரணம் எதுவென்றால், அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தின்படியும் அவனுடைய தூதரின் ஸுன்னாவின்படியும் ஆட்சி செய்யாமல் இருப்பதுதான். முஸ்லிம் ஆட்சியாளர்களின் அரசியல் கொள்கைகள் எல்லா இஸ்லாமிய நாடுகளிலும் மோசமடைந்து வருகின்றன. கம்யூனிச, சோசலிச முறைகளைக் கையாண்டு, குடிகாரர்கள், பாதிஸ்ட் கட்சிக்காரர்கள், நாசர் ஆதரவாளர்கள், மது அருந்துவோர் என்று பல்வகைத் தரப்பினரையும் அவர்கள் திருப்திப்படுத்த விரும்புகிறார்கள். பல நிறங்களில் செயல்படுகிறார்கள். முஹம்மது இப்னு ஸாலிம் அல்பைஹானீ (ரஹ்) ஒரு கவிதையில் கூறுகிறார்:
“குடிபானங்கள் மாறுவதைப் போல் மாறுவார்;
ஆட்சியைப் பிடிப்பதற்காக ஆயிரம் ஆடை அணிவார்;
முஸ்லிம்களிடம் அவர்களில் தன்னையும் ஒருவராக எண்ணிக்கொள்வார்;
தன் பங்கை ஐந்து வழிகளில் தேடுவார்;
நாத்திகரிடம் அவர்களில் தன்னையும் ஒருவராக எண்ணிக்கொள்வார்;
கம்யூனிசத்தின் ஒவ்வொரு விசயத்தையும் மனப்பாடம் செய்வார்;
ஆங்கிலேயர்களைப் பார்த்தால் அவர்களைப்போல் ஆகிவிடுவார்;
பாரிஸில் ஃபிரஞ்சுக்காரராக ஆக்கிக்கொள்வார்.”
அவர்கள் பல்வேறு நிறங்களாக மாறுவார்கள். மக்கள் அவர்களைக் கண்டுகொள்வார்கள். எந்தளவுக்கெனில் கம்யூனிசவாதியோ பாத்திஸ்டோ முஸ்லிமோ யாராக இருந்தாலும், ஏன் உலக வாழ்க்கையை விரும்புகிறவர்கூட அந்த ஆட்சியாளரை நம்பமாட்டார்கள். இத்தகைய தலைவர்களும், ஆட்சியாளர்களும் இஸ்லாமிய அறிஞர்களின் வழிகாட்டுதலோடு அல்லாஹ்விடம் தவ்பா செய்து மீண்டு, சீரான ஆட்சியை அமைக்க வேண்டும். இவ்வாறு அனைத்துத் தரப்பினரையும் திருப்திப்படுத்தும் ஆட்சியை முஸ்லிம்கள் விரும்ப முடியாது. அல்லாஹ் கூறுகிறான்:
وَمَا النَّصْرُ إِلَّا مِنْ عِنْدِ اللَّهِ
அல்லாஹ்விடமிருந்தே தவிர உதவி இல்லை. (குர்ஆன் 3:126)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
هَلْ تُنْصَرُونَ وَتُرْزَقُونَ إِلاَّ بِضُعَفَائِكُمْ
உங்களிடையேயுள்ள பலவீனர்களின் (சாமானிய மக்களின்) காரணத்தால்தான் உங்களுக்கு (அல்லாஹ்வின்) உதவி வழங்கப்படுகிறது. (புகாரீ 2896)
இவர்களின் ஆட்சியில் மக்கள் பயத்திலும், தடுமாற்றத்திலும் வாழ்கின்றனர். ஏனெனில், சாமானியர்களும், பணக்காரர்களும் தம்மைத் தேடி வர வேண்டுமென அவர்கள் ஆசைப்படுகின்றனர். குடிமக்களின் அனைத்து விடயங்களிலும் தலையிடுகின்றனர். ஹறாமான பொருளீட்டல் இன்றி ஒரு வியாபாரியைச் சரிவர வியாபாரம் செய்ய விடமாட்டார்கள். ஹறாமான முறைகள் இன்றி ஒரு விவசாயியை விவசாயம் பார்க்க விடமாட்டார்கள்.
எனவே, மார்க்க மேதைகள் இவற்றுக்கான சரியான தீர்வை அவர்களுக்கு வழங்க வேண்டும். தீமையிலிருந்து அவர்களைத் தடுக்க வேண்டும். அதற்காக ஆர்ப்பாட்டங்கள் செய்து, அவர்களின் ஆட்சியை கவிழ்க்க வேண்டுமென நான் கூறவில்லை. ‘நாம் முஸ்லிம்கள், நமது சமூகம் முஸ்லிமான சமூகம். நாம் அல்லாஹ்வின் வேதத்திற்கு முற்றிலும் கட்டுப்படுவோம். நமக்கு முன்னால் அல்லாஹ்வின் கட்டளைகளும், நபியவர்களின் தூய வழிகாட்டுதலும் இருக்கின்றன. இவை இரண்டோடும் நீங்கள் இருக்கும் வரை நாம் உங்களோடு இருப்போம். இவை இரண்டையும் நீங்கள் புறக்கணித்தால் வழிகேடு என்பது உங்களோடு உள்ளது. குஃப்ருக்கான தெளிவான ஆதாரம் உங்களிடம் தென்படாத வரை உங்களுக்கு எதிராக நாம் செயல்படமாட்டோம்’ என அவர்களுக்கு தெளிவான உபதேசங்களை வழங்க வேண்டும். அல்லாஹ்வே உதவி தேடப்படுவதற்குத் தகுதியானவன்.
ஆட்சியாளர்களைப் பற்றி நாம் பேசுவதாக இருந்தால் குடிமக்களைப் பற்றியும் நாம் பேசியாக வேண்டும். ஏனென்றால், குடிமக்கள் ஆட்சியாளர்களுக்கு நல்லதை நினைக்க மாட்டார்கள். பலவிதமான காரணங்களை முன்னிட்டு பல்வேறு கோத்திரத்தார்களும் பல ஊர்க்காரர்களும் ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்வதையும் புரட்சி செய்வதையும் நீங்கள் பார்க்கலாம். இது இஸ்லாமிய நடைமுறை அல்ல. பொறுமையாய் இருக்குமாறே நமக்கு இஸ்லாம் கட்டளை பிறப்பித்துள்ளது. நபி (ஸல்) அவர்கள் அன்ஸாரித் தோழர்களுக்குப் பின்வருமாறு கூறியுள்ளார்கள்:
إِنَّكُمْ سَتَرَوْنَ بَعْدِي أَثَرَةً فَاصْبِرُوا حَتَّى تَلْقَوْنِي
எனக்குப் பிறகு (உங்களைவிட ஆட்சியதிகாரத்தில் மற்றவர்களுக்கு) முன்னுரிமை தரப்படுவதை நீங்கள் காண்பீர்கள். ஆகவே, (மறுமையில்) என்னைச் சந்திக்கும்வரை நீங்கள் பொறுமையாக இருங்கள். (அறிவிப்பு: அனஸ் (ரலி), புகாரீ 2377, முஸ்லிம் 1059)
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
قَالَ لَنَا رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِنَّكُمْ سَتَرَوْنَ بَعْدِي أَثَرَةً وَأُمُورًا تُنْكِرُونَهَا قَالُوا : فَمَا تَأْمُرُنَا يَا رَسُولَ اللهِ قَالَ أَدُّوا إِلَيْهِمْ حَقَّهُمْ وَسَلُوا اللَّهَ حَقَّكُمْ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம், ‘எனக்குப் பிறகு (ஆட்சியதிகாரத்தில் உங்களைவிடப் பிறருக்கு) முன்னுரிமை வழங்கப்படுவதையும், நீங்கள் வெறுக்கின்ற சில விசயங்களையும் பார்ப்பீர்கள்’ என்று சொன்னார்கள். மக்கள், ‘அப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று தாங்கள் கட்டளையிடுகிறீர்கள், அல்லாஹ்வின் தூதரே?’ என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், ‘(ஆட்சியாளர்களான) அவர்களுக்கு அவர்களது உரிமையை வழங்கிவிடுங்கள்; உங்கள் உரிமையை அல்லாஹ்விடம் கேளுங்கள்’ என்று சொன்னார்கள். (புகாரீ 7052, முஸ்லிம் 1843)
எனவே, ஆட்சியாளர்கள் அல்லாஹ்வின் வேதத்திற்கும் ரஸூல் (ஸல்) அவர்களின் வழிமுறைக்கும் இணங்க ஆட்சி செய்வதும், அந்த ஆட்சிக்குக் கீழ் குடிமக்கள் இருப்பதும் கட்டாயக் கடமையாகும். அப்போதுதான் ஒரு நாட்டில் பாதுகாப்பும் அமைதியும் நிலைநாட்டப்படும். பதற்றத்தில் இருக்கின்ற உள்ளங்களும் அமைதி பெறும்; வெற்றி அடையும். அல்லாஹ்வே போதுமானவன்.
ஷேக் முகப்பில் இப்னு வாதியீ
தமிழாக்கம்: குகைவாசிகள் பதிப்பகம்
இஸ்லாமிய நூல்கள் வாங்க
Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்: