இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
04 : மார்க்க விடயங்களில் தர்க்கம்புரிதல், விவாதித்தல், சண்டையிடுதல் போன்றவற்றை விட்டு விடவேண்டும்.
விளக்கம்:
மேற்கூறப்பட்ட மூன்று விடயங்களும் சொற்களால் வேறுப்பட்டாலும், மிக நெருக்கமான கருத்துக்களையே கொண்டுள்ளன. கண்ணியம் மிக்க அல்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்:
“ஆகவே, அவர்களைப்பற்றி வெளிரங்கமான விஷயம் தவிர (வேறெது பற்றியும்) நீர் தர்க்கம் செய்ய வேண்டாம். ”
(ஸூரா அல் கஹ்ஃபு: வசனம்: 22)
ஸாயிப் பின் அப்துல்லாஹ் அல்மக்ஸுமி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் இஸ்லாத்திற்கு முன்னர் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் தோழராக இருந்துள்ளார்கள். அவர்கள் கூறுகின்றார்கள்: நான் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் சென்றேன். அப்போது (நபித்தோழர்கள்) என்னைப் பற்றி புகழ்ந்துரைத்து என்னை நினைவுபடுத்த ஆரம்பித்தனர். அப்போது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் “நான் அவரைப்பற்றி உங்களைவிட அதிகம் அறிவேன்” என்றார். அதற்கு நான் “நீங்கள் உண்மை உரைத்துவிட்டீர்கள். எனது தாயும், தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். எனது சிறந்த நண்பராக நீங்கள் இருந்தீர்கள். மேலும், நீங்கள் சர்ச்சை புரிபவராகவோ, அல்லது தர்க்கம் புரிபவராகவோ இருந்ததில்லை” என்றார்.
(நூல்கள்: அஹ்மத் 3/425 இப்னு மாஜா : 2287 அபூதாவூத் : 4836)
(மேற்கூறப்பட்ட செய்தி, இஸ்லாத்திற்கு முன்னர்கூட நபியவர்களிடம் விவாதித்தல், தர்க்கம் புரிதல் போன்ற கூடாத பழக்கங்கள் காணப்படவில்லை என்பதையே சுட்டிக் காட்டுகின்றது.)
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறுகின்றார்கள்: “அல்குர்ஆனில் (சந்தேகத்தை ஏற்படுத்தக்கூடிய முறையில்) விவாதிப்பது இறைநிராகரிப்பை ஏற்படுத்தும்”
(நூல்: அஹ்மத் : 2/286,300,424,503, அபூதாவூத்: 4603, இப்னு ஹிப்பான்:73)
அதாவது, அல்குர்ஆனில் சந்தேகத்தை ஏற்படுத்தக்கூடியவாறு விவாதிப்பதும், சர்ச்சையில் ஈடுபடுவதும் இறைநிராகரிப்புக்கு இட்டுச் செல்லும் என்பதையே மேற்கூறப்பட்ட நபிமொழி விளக்குகின்றது.
அத்தோடு மேற்கூறப்பட்டுள்ள தர்க்கம் புரிதல் என்பதுடன் தொடர்பான விளக்கங்கள் பொதுவாகவே, அனைத்து மார்க்க விடயங்களிலும் தர்க்கிப்பதையும், விவாதிப்பதையும் கண்டிக்கின்றன. விதி, மனிதனின் செயற்பாடுகள் போன்றவற்றில் தர்க்கித்தல், அல்லாஹ்வின் திருநாமங்கள், பண்புகள், அவை குறித்து நிற்கும் கருத்துக்கள், அவை விளக்குகின்ற விடயங்கள் போன்றன குறித்து விவாதம் புரிதல் போன்ற அனைத்துமே இதில் உள்ளடங்கும். அவ்வாறே, மண்ணறை (கப்ர்) இனது வேதனை, அதில் தண்டிக்கப்படும் முறை, அதற்குப் பின்னருள்ள வாழ்வு போன்ற மறைவான விடயங்களில் தர்க்கம் புரிவதும் தடைசெய்யப்பட்டதாகும்.
எனவே, அஹ்லுஸ் ஸுன்னா வல்ஜமாஅத்தினர் தெளிவான ஆதாரம் உள்ளவைகளை மாத்திரமே பேசுவர்; மேலும், பித்அத்காரர்களுடன் விவாதிக்கவும் மாட்டார்கள்; அல்லாஹ் தமக்குத் தெளிவுபடுத்தாது விட்டுவிட்ட மறைவான விடயங்களில் தர்க்கம் புரியவும் மாட்டார்கள். மறைவான ஞானம் அல்லாஹ்வுக்கு மாத்திரம் சொந்தமான விடயமாகும்.
எனவே, தாம் குறிப்பிடுவதற்காக எந்தவொரு ஆதாரமும் கிடைக்காத பட்சத்தில், மறைவான விடயங்கள் தொடர்பாக எதிலும் கருத்து முரண்படவோ, தர்க்கிக்கவோ மாட்டார்கள். இது அஹ்லுஸ் ஸுன்னாவின் பொதுவான நம்பிக்கைக் கோட்பாடுகளில் ஒன்றாகும். அல்லாஹ் மிக அறிந்தவன்.
Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்: