இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் உஸூலுஸ் ஸுன்னாஹ் என்ற நூலில் இருந்து | தொடர் 0️⃣2️⃣|
2 : பித்அதுக்களை விட்டு விடவேண்டும். எல்லா பித்அத்துக்களும் வழிகேடாகும் (இதுவும் அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத்தினருடைய அடிப்படைகளுள் ஒன்று).
விளக்கம்:-
“பித்அத்” என்பது மார்க்கத்தில் அதாவது இஸ்லாமிய ஷரீஅத்தில் இபாதத்துக்களில் புதிதாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டவைகளையே குறிக்கும்.
ஆனால், இவை இஸ்லாத்தில் உள்ளவைகளன்று. இவ்வாறு புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள பித்அத்துக்கள் மூன்று வகைப்படுகின்றன. அவைகளாவன:-
1. நம்பிக்கை சார்ந்த பித்அத்துக்கள்.
2. உடல் உறுப்புக்களால் நிறைவேற்றப்படுகின்ற இபாதத்துக்கள் சார்ந்த பித்அத்துக்கள்.
3. சொல்ரீதியான இபாதத்துக்களில் ஏற்படுத்தப்பட்ட பித்அத்துக்கள்.
எனினும், நிச்சயமாக அல்லாஹ் இந்த மார்க்கத்தைப் பூர்த்தியாக்கி விட்டான். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் இறுதிக்காலத்தில் இவ்வசனம் இதனையே கூறுகின்றது.
அல்லாஹ் கூறுகின்றான்:-
இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தைப் பரிபூரணமாக்கிவிட்டேன்; மேலும், நான் உங்கள் மீது எனது அருட்கொடையைப் பூர்த்தியாக்கிவிட்டேன். மேலும், உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்துள்ளேன்.
– அல் மாயிதா: 03
அவ்வாறே நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்களும் தமது இறைவனால் தமக்கு இறக்கியருளப்பட்ட மார்க்கத்தைப் பூரணமாக எத்திவைத்தார்கள். மேலும், தேவையான அனைத்து விடயங்களையும் ஸஹாபக்களுக்குக் கற்றுக்கொடுத்தார்கள். சிறுநீர் கழித்துவிட்டு சுத்தம் செய்கின்ற முறை போன்ற பிறர் நேரடியாகக் கேட்டுத் தெரிந்துகொள்ள வெட்கப்படுகின்ற சிறிய அம்சங்களைக்குக் கூட நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தம் தோழர்களுக்குக் கற்றுக்கொடுக்காமல் விட்டுவிடவில்லை.
வளிமண்டலத்தில் சிறகடித்துப் பறந்து திரிகின்ற பறவையிலிருந்து கூட பல அறிவு ஞானங்களை நமக்குப் போதித்துத் தந்துள்ளார்கள்.
இதனை அபூதர் அல்கிபாரீ (ரழியல்லாஹு அன்ஹு) கீழ்வருமாறு குறிப்பிடுகின்றார்:
“வளிமண்டலத்தில் பறந்து திரிகின்ற பறவையிலிருந்துகூட பல அறிவு ஞானங்களை நமக்குப் போதிக்காமல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்கள் இவ்வுலகை விட்டும் பிரிந்து செல்லவில்லை.
– நூல்: அஹ்மத் 5:153,163 ஹைதமீ: மஜ்மஃ அஸ்ஸவாயித் 8: 263, 264.
எனவே, தமது உம்மத்தினர் மார்க்கத்தில் புதிதாக எதனையும் ஏற்படுத்தத் தேவையில்லாத அளவுக்கு அனைத்து விடயங்களையும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கற்றுத்தந்துள்ளனர்.
‘தனது உம்மதினர் 73 பிரிவினராகப் பிரிவர் அதாவது அவர்கள் வழிகெட்ட கொள்கைகளுடனும் கோட்பாடுகளுடனும் காணப்படுவர். அவர்களில் ஒரு கூட்டத்தைத் தவிர ஏனைய அனைவருமே நரகம் செல்வர் என்று நபியவர்கள் ஏற்கனவே முன்னறிவிப்புச் செய்து விட்டார்கள்.
“யூதர்கள் 71 கூட்டத்தினராகப் பிளவுபட்டுவிடுவர், கிறிஸ்தவர்கள் 72 கூட்டத்தினராகப் பிளவுபட்டுவிடுவர், எனது உம்மத்தினர் 73 கூட்டத்தினராகப் பிளவுபட்டுவிடுவர், அவர்களில் ஒரு கூட்டத்தினரைத் தவிர, ஏனைய அனைவருமே நரகம் செல்வர்” என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நவின்றார்கள். அப்போது (நபித்தோழர்கள்) அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் யார்? என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் “இன்று நானும் எனது ஸஹாபாக்களும் இருக்கின்ற வழிமுறையைப் பின்பற்றி நடப்பவர்களே” என்று பதிலுரைத்தார்கள்.
– அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) | திர்மிதீ: 2641, அஸ்ஸில்ஸிலதுல் ஸஹீஹா: 203,1492
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் செய்த இந்த முன்னறிவிப்பை இன்று இஸ்லாமிய உலகம் நிதர்சனமாகக் காண்கின்றது. அகீதா ரீதியான பித்அத்துக்களும் பிளவுகளும் தோன்றிவிட்டன. இவ்வாறு தோன்றிய பித்அத்துக்களையும், பிரிவினர்களையும் ஸலபுஸ்ஸாலிஹீன்களாகிய நம் முன்னோர்கள் பொருத்தமான பெயர்களில் அறிமுகப்படுத்தியும், அடையாளப்படுத்தியும் உள்ளனர்.
இவர்களில் கவாரிஜ்கள், கதரிய்யாக்கள், ஐஹமிய்யாக்கள், முஃதஸிலாக்கள், ராபிழாக்கள், முஷப்பிஹாக்கள், முஅத்திலாக்கள், ஸுபிய்யாக்கள், ஜபரிய்யாக்கள், முர்ஜிஆக்கள், மதசார்பற்றவர்கள், பாதிஸ்ட்டுக்கள், கப்ர் வணங்கிகள், அஷ்அரிய்யாக்கள் போன்ற பிரிவினர்களும் இவர்களிலிருந்து பிரிந்துசென்ற தீஜானிய்யா தரீக்கா, நக்ஷபந்திய்யா தரீக்கா, ஷிஆக்கள், ஜாஹிலிய்யாக்கள், பஹாஸமிய்யாக்கள் போன்ற பிரிவினர்களும் இங்கு பெயர் குறிப்பிடாத இன்னும் பல பிரிவினரும் அடங்குவர்.
இப்பிரிவினர்களில் சிலர் தனது பித்அத்தின் காரணமாக இறை நிராகரிப்பிற்கு உட்படுகின்றனர். வேறு சிலர் தமது பித்அத்துக்களின் காரணமாக பெரும் பாவத்திற்கு உட்படுகின்றனர். இவர்கள் பற்றிய தீர்ப்புக்கூறும் இஸ்லாமிய அறிஞர்கள் பல்வேறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
எனவே, அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத்தினரும் மார்க்க அறிஞர்களும் மேற்படி பிரிவினர்களுடன் விவாதங்களில் ஈடுபட்டும், அவைகளை சமூகத்துக்கு எச்சரிக்கை செய்தும் உள்ளனர். மேலும், இவ்வாறான வழிகெட்ட பிரிவினர்கள் பேசுவதை செவிமடுத்தல், அவர்களின் பேச்சைக் கேட்டல், அவர்களுடன் உட்கார்ந்திருத்தல், அவர்களுடன் விவாதம் புரிதல் போன்ற அனைத்தும் தடைசெய்யப்பட்டதாகும். மேலும், இவர்களிடமிருந்து ஒதுங்கி நடக்குமாறும் உபதேசம் செய்துள்ளனர்.
ஸலபுஸ்ஸாலிஹீன்களும் இமாம்களும் மேற்கூறப்பட்ட பித்அத்வாதிகள் பற்றிக் குறிப்பிட்டுள்ள விடயங்களை இமாம் இப்னு பத்தா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் தமது “அல்இபானதுல் குப்ரா“ எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். (இது அஹ்லுஸ்ஸுன்னாவின் கொள்கை விளக்க நூல்களில் பிரசித்தி பெற்ற ஒரு நூலாகும்.).
வழிகெட்டவர்கள் போதிக்கின்ற அமல்கள் ரீதியான பித்அத்துக்களின் நிலையும் இவ்வாறுதான். இவர்கள் மெளலிதுகள், ரகாயிப் தொழுகை போன்ற பித்அத்துக்களை ஏற்படுத்தினர். மேலும், கடமையான மற்றும் உபரியான தொழுகைகளிலும், ஏனைய வணக்கங்களிலும், ஜனாஸாக்களை அடக்குகின்ற விடயங்களிலும், மையவாடிகளிலும் வழிகெட்ட பல பித்அத்துக்களை ஏற்படுத்தியுள்ளனர். இவ்வாறு இவர்கள் ஏற்படுத்திய பித்அத்துக்களுக்கு ஷரீஅத்தில் எந்தவகையான ஆதாரமும் இல்லை.
இவ்வாறு வரலாறு நெடுகிலும் ஏற்படுத்தப்பட்ட பித்அத்துக்களை அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத்தினரின் இமாம்களும், அறிஞர்களும் அடையாளப்படுத்தியும், கண்டித்தும் வந்துள்ளனர். அவ்வப்போது தகுந்த மறுப்புக்களையும் எழுதியுள்ளனர்.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:
“காரியங்களில் மிகக் கெட்டது புதிதாக ஏற்படுத்தப்பட்டவைகளாகும்; புதிதாக ஏற்படுத்தப்பட்ட அனைத்தும் பித்அத்துக்களாகும். பித்அத்துக்கள் அனைத்தும் வழிகேடுகளே!’*
அறிவிப்பவர்: இர்பாழ் பின் ஸாரியா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் | நூல்: அபூதாவூத்: 4607, திர்மிதீ: 2678, இப்னுமாஜா : 32, 43
மேலும், நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்கள் கூறினார்கள்: “இந்த மார்க்கத்தில் இல்லாதவைகளை அதில் யாராவது ஏற்படுத்தினால் அது மறுக்கப்படும்”.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) | ஸஹீஹுல் புகாரி: 2697, ஸஹீஹ் முஸ்லிம்: 1718.
பித்அத்துக்களைக் கண்டிக்கின்ற இதுபோன்ற நபிமொழிகள் ஏராளமாகக் காணப்படுகின்றன.
Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்: