அல்லாஹ் அல்லாதவர்கள் மீது சத்தியம் செய்வது பற்றிய சட்டம் என்ன? அது இணை வைப்பா (ஷிர்க்) இல்லையா

கேள்வி:
அல்லாஹ் அல்லாதவர்கள் மீது சத்தியம் செய்வது பற்றிய சட்டம் என்ன?அது இணை வைப்பா (ஷிர்க்) இல்லையா?

பதில்:
அல்லாஹ் அல்லாதவர்கள் மீது சத்தியம் செய்வது- வானவர்கள்-நபி- வலீ- அல்லது அல்லாஹ்வுடைய படைப்புகளில் ஏதேனும் ஒரு படைப்பின் மீது சத்தியம் செய்வது என்பது ஹராம் ஆக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஆதாரமாக நபி ﷺ அவர்களிடம் இருந்து இப்னு உமர் (رضي الله عنه) அவர்கள் அறிவிக்கின்ற ஹதீஸ் இருக்கின்ற காரணத்தால் (அல்லாஹ் அல்லாதவர்கள் மீது சத்தியம் செய்வது ஹராம் ஆக்கப்பட்டுள்ளது).


ஒரு பயணத்தில் உமர் (رضي الله عنه) அவர்கள் தன் தந்தையின் மீது சத்தியம் செய்வதை இப்னு உமர் (رضي الله عنه) அவர்கள் கண்டார்கள். அப்போது அவர்களை அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் அழைத்து,

கவனியுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் உங்கள் தந்தையின் (பெற்றோர்) மீது சத்தியம் செய்வதை தடுத்து இருக்கிறான். யார் சத்தியம் செய்கிறாரோ அவர் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யட்டும், இல்லையெனில் மவுனமாக இருக்கட்டும் (புகாரி 6108) என்று கூறினார்கள்.

மற்றொரு அறிவிப்பில் யார் சத்தியம் செய்கிறாரோ அவர் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யட்டும் என்று கூறினார்கள். குறைஷிகள் தங்களுடைய மூதாதையர்கள் மீது (பெற்றோர்) மீது சத்தியம் செய்பவர்களாக இருந்தார்கள். அதற்காக நபி ﷺ அவர்கள் கூறினார்கள் உங்களுடைய பெற்றோரின் மீது சத்தியம் செய்யாதீர்கள் (முஸ்லிம் 1646).


ஆகவே அல்லாஹ் அல்லாதவர்கள் மீது சத்தியம் செய்வதை நபி ﷺ அவர்கள் தடுத்து இருக்கிறார்கள். இங்கு தடை என்பது ஹராம் என்று குறிக்கும். அதுமட்டுமல்லாமல் இதை நபி ﷺ அவர்கள் ஷிர்க் என்றும் பெயரிட்டுள்ளார்கள்..

உமர் رضي الله عنه அவர்கள் அல்லாஹ்வுடைய தூதர் ﷺ அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள்: அல்லாஹ் அல்லாத வேறு விஷயங்களின் மீது சத்தியம் செய்பவர் திட்டமாக இணை வைத்து விட்டார் (அஹ்மத் -1/47).

மற்றொரு ஹதீஸில் அல்லாஹ்வுடைய தூதர் ஸல் அவர்கள் கூறும் போது, யார் அல்லாஹ் அல்லாதவர்கள் மீது சத்தியம் செய்கிறாரோ, அவர் திட்டமாக இறைநிராகரிப்பு (குஃப்ர்) அல்லது இணை வைப்பு (ஷிர்க்) வைத்து விட்டார் (திர்மித-1535/ஹஸன்)


மார்க்க அறிஞர்கள் இதை சிறிய இணைவைப்பு என்று குறிப்பிடுகிறார்கள்.. அவர்கள் கூறும் போது, இது ( அல்லாஹ் அல்லாதவர்கள் மீது சத்தியம் செய்வது) மார்க்கத்தை விட்டு வெளியேற்றி விடும் ஷிர்க் அல்லாத வேறு ஷிர்க் (சிறிய ஷிர்க்) ஆகும்… அல்லாஹ் பாதுகாப்பானாக. அது பெரும்பாவங்களில் ஒன்றாகும். இதனால் தான் இப்னு மஸ்ஊத் (رضي الله عنه) அவர்கள் அல்லாஹ்வின் மீது பொய்யாக சத்தியம் செய்வதை விட அல்லாஹ் அல்லாதவர்கள் மீது உண்மையாக சத்தியம் செய்வது எனக்கு விருப்பமானது என்று கூறினார்கள்..

அபூ ஹுரைரா (رضي الله عنه) அவர்கள் அறிவிக்கும் ஒரு ஹதீஸ் இதை உறுதிப்படுத்துகிறது.. நபி ﷺ அவர்கள் கூறினார்கள், உங்களில் யார் சத்தியம் செய்து, அதில் லாத் உஸ்ஸாவைக் கொண்டு செய்கிறார்களோ, அவர் லா இலாஹ இல்லல்லாஹு என்று கூறட்டும். மேலும் தன் சகோதரனிடம் வா சூது விளையாடுவோம் என்று கூறுபவர், (அதற்கு பரிகாரமாக) தர்மம் செய்யட்டும்.(புகாரி 6130)

முஸ்லிம்களில் யார் லாத் உஸ்ஸாவைக் கொண்டுசத்தியம் செய்கிறார்களோ, அவர்களுக்கு லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறட்டும் என்று நபி ﷺ அவர்கள் கட்டளையிட்டார்கள். ஏனெனில் அல்லாஹ் அல்லாதவர்களின் மீது சத்தியம் செய்வதற்கு எதிரான தவ்ஹீதை முழுமை படுத்துகின்ற (வாக்கியமாகும்). ஏனெனில் அதிலேயே அல்லாஹ்விற்கு மட்டுமே குறிப்பாக செய்யவேண்டிய கண்ணியம் என்பது அல்லாஹ் அல்லாதவர்களின் மீது செய்யப்படுகிறது. அது அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்வதாகும்.சிலர் தம்முடைய பெற்றோரின் மீது- (தந்தையின்) மீது சத்தியம் செய்ததாக வந்திருக்கக்கூடிய ஹதீஸ்கள் அனைத்தும் தடை செய்யப்படுவதற்கு முன்பு நடைபெற்றவை. அவை (பெற்றோரின் மீது சத்தியம் செய்வது- தந்தையின் மீது சத்தியம் செய்வது) ஜாஹிலியா காலத்திலே அரபுகளிடத்திலே இருந்த ஒரு பழக்கமாகும்.

அல்லாஹ் உதவி செய்வதற்கு போதுமானவன். நம்முடைய தூதரின் மீது அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக.

ஃபதாவா
லஜ்னத் தாயிமா லில்புஹுஸில் இல்மிய்யா வல் இஃப்தாஃ. (முதல் பாகம்/ முதல் புத்தகம்- அகீதா/ அல்லாஹ் அல்லாதவர்கள் மீது சத்தியம் செய்வது/ அல்லாஹ் அல்லாதவர்கள் மீது சத்தியம் செய்வது ஷிர்க் ஆகுமா)
ஃபத்வா எண்: 1332

தமிழாக்கம்:ஷெய்க் யூனுஸ் ஃபிர்தவ்ஸி

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply